
லெபனானில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி சுற்றுலா வீஸா வழங்கி ஏமாற்றும் வியாபாரம் குறித்த தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக லெபனான் உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிலாளர் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர் பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கையர்களை சுற்றுலா வீஸா மூலம் அழைத்துச்சென்று தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்காது கைவிட்டுச் சென்ற பலர் லெபனான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு உதவி நாடி வருவதாகவும் அவர்கள் பணியகத்தில் பதியாதுள்ளமையினால் அவர்களுக்கு உரிய நிவாரணங்களை முடியாது இருப்பதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வௌிநாட்டுத் தொழில்வாய்ப்பை நாடும் போது பணியகத்தில் பதிவு செய்வது மிகவும் அவசியம் என்றும் அது தொடர்பில் கவனமாக இருக்குமாறும் பணியகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அதேபோல், சீட்டு கட்டும் வியாபாரம் மூலமாகவும் பல இலங்கையர் ஏமாற்றப்பட்டு வருவதாக லெபனானுக்கான இலங்கை தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
சீட்டு கட்டும் வியாபாரத்தை ஆரம்பிப்பவர் முதல் மாதத்தில் அனைவரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். இதனால் பல இலங்கையர் பாதிக்கப்பட்டுள்ளனர். எழுத்து மூலமான எவ்வித சாட்சிகளும் இன்றி பணம் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்றமையினால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது. எனவே வௌிநாடு சென்று உழைக்கும் இலங்கையர் ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்காமல் அவதானத்துடன் இருக்க வே்ணடும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.