புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொரியநாட்டு சட்ட ஒழுங்குவிதிகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்

தொழில் அனுமதிப்பத்திர முறையானது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்புடையதாக அமைகின்றதென்பதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு கொரிய அரசாங்கத்தைச் சார்ந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் யாவரும், சொந்த சட்ட அந்தஸ்தினைப் பொருப்படுத்தாது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழும், தொழிலாளர் உரிமைகள் சட்டத்தின் கீழுமான உரிமைகளைக் கொண்டுள்ளனர்.

தென்கொரிய அரசாங்கமானது தொழில் அனுமதிப்பத்திர முறை பற்றிய சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தென் கொரியாவுக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சர்வதேச நியமங்கள்

புலம்பெயர் தொழிலாளர்களின் சட்ட அந்தஸ்து யாது என்பதைப் பெர்ருப்படுத்தாது சகல புலம்பெயர் தொழிலாளர்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் அவற்றை மேம்படுத்த வேண்டுமெனவும் ஏற்பாடுகளை வழங்குகின்ற உயர்மட்டத்திலான சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சாசனங்கள் பலவற்றை தென்கொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், சகல புலம்பெயர் தொழிலாளர்களினதும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் இதுவரை தென் கொரியா
ஒப்பமிடவில்லை.

தென் கொரியாவானது கீழே தரப்பட்டுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைகளுக்கான ஒரு அரச தரப்பாகும். தொழிலாளர்களின் பாதுகாப்புப் பற்றிய பிரதான நியமங்களாகக் கருதப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எட்டு அடிப்படை உடன்படிக்கைகளுள் பின்வருவன தென் கொரியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

• சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 100 ஆம் இலக்க உடன்படிக்கை. (சமமான பணிக்கொடை பற்றிய உடன்படிக்கை, 1951. (தென்கொரியாவினால் 1997 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)

• சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 111 ஆம் இலக்க உடன்படிக்கை. (பாகுபாடு காட்டப்படுதல் (தொழிலாளர்களும் தொழிலும்) பற்றிய உடன்படிக்கை. 1958. (தென் கொரியாவினால் 1998 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)

• சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 138 ஆம் இலக்க உடன்படிக்கை. ஆகக் குறைந்த வயது பற்றிய உடன்படிக்கை, 1973. (தென் கொரியாவினால் 1999 ஆம் ஆண்டு சனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)

• சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 182 ஆம் இலக்க உடன்படிக்கை. சிறுவர்களை வேலைக்கமர்த்துவதன் பாதகமான தன்மை பற்றிய உடன்படிக்கை, 1999. (தென் கொரியாவினால் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.)

எவ்வாறாயினும், தென் கொரியாவானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சில முக்கியமான உடன்படிக்கைகளின் ஒரு அரச தரப்பாக இடம்பெறவில்லை. அத்தகைய உடன்படிக்கைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தென் கொரியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற ஆபத்தான நிலைமைகளைக் தவிர்த்துக்கொள்ள முடியும்.

கூட்டுசேர்வதற்கான சுதந்திரம்

தென் கொரிய சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கும் அவற்றில் இணைவதற்கும் தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், தென் கொரியாவில் இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிற்சங்கமொன்றை ஏற்படுத்த முடியாது போயுள்ளது.

தொழில் அனுமதிப்பத்திர முறை

தொழில் அனுமதிப்பத்திர முறை பற்றிய சட்டமானது 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வலுவுக்கு வந்தது. அதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது.

மேற்படி சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் மூலம் தென் கொரியாவானது உழைப்பினை இறக்குமதி செய்கின்றதும்; சட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முயற்சி எடுத்ததுமான முதலாவது ஆசிய நாடாக மாறியது. வெற்றிடமொன்றை நிரப்புவதற்காக தென் கொரிய ஊழியர் ஒருவரை கண்டுபிடித்துக்கொள்ள முடியாத ஒரு தொழில் வழங்குனர் தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் ஒரு வருட ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டவர் ஒருவரை தொழிலில் ஈடுபடுத்துவதற்காக தொழில் அமைச்சிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த ஒப்பந்தத்தினை ஆகக் கூடியது மூன்று வருடங்களுக்காக நீடித்துக்கொள்ள முடியும்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விதிகளின் பிரகாரம் தமது ஊழியர்களுக்காக மாதாந்தம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் பயன்படுத்துகின்றதான இயந்திர சாதனங்களின் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதிப்பதற்காகவும் சகல தொழில்வழங்குனர்களும் கட்டுப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள்

தென்கொரிய சட்டத்தின் கீழ் தொழிற்சங்கமொன்றை சட்ட ரீதியாகப் பேணிச் செல்வதன் பொருட்டு அதனை தொழில் அமைச்சில் பதிவு செய்தல் வேண்டும்.

கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல்

முறைசாரா புலம்பெயர்ந்தோர், கைது செய்யப்படுதல், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த வசதிகளின் கீழ் தடுத்து வைக்கப்படுதல் மற்றும் அவர்களது தாய் நாடுகளுக்கு பலாத்காரமாக திருப்பி அனுப்பப்படுதல் போன்ற ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலாளர்களைத் தேடி பரிசோதிப்பதற்கும், தடுத்து வைப்பதற்கும், தடுத்து வைப்பதற்கான கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றதான அதிகாரமானது நீதிபதியொருவரால் தடுத்து வைத்தல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுதல் வேண்டுமென குறித்துரைக்கப்படுகின்ற அரசியலமைப்பு ஏற்பாட்டினை விஞ்சிச் செல்கின்றதாகத் தெரிகின்றது. குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்களால் நாடுகடத்தப்படுவதற்கான கட்டளைகளும் பிறப்பிக்கப்படுவதோடு அத்தகைய கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் தடுத்து வைத்திருப்பதற்கான கால வரையறை கிடையாது.

கொரிய குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்களால் முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களும் நியாயமான காரணங்கள் இன்றி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. சில சமயங்களில் அவை பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் உரிய இடங்களில் தங்கியிருத்தல் அல்லது மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்பட்ட நிலைமைகளாகும். முறைசாரா மற்றும் பதிவு செய்யப்படாத புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்ற இடங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்திமுறையாக குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்களால் முறைசார் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பதிவாகியுள்ளன.

தாம் பணியாற்றுகின்றபோது தமக்குச் சந்திக்கக் கிடைக்கின்ற முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கும் ஒரு கடப்பாடு சமூக சேவைகளை உள்ளிட்ட சகல அரச ஊழியர்களுக்கும் உள்ளது. சில நிபுணர்களுடைய கருத்துப்படி மேற்படி கடப்பாடின் காரணமாக சுகாதார சேவைகளைப் போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையினைக்கொண்டுள்ள முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் ஆபத்தான நிலைமைகளுக்குத் தள்ளப்படும் அல்லது அவர்கள் மனித உரிமை மீறல்களின் இரையாக மாறும் நிலைமை தோன்றியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435