சுகாதாரத் துறையை பாதிக்கச் செய்யும் அரசியில் தலையீடு

சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளதா?

அரச சுகாதார துறையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் மற்றும் குடும்ப தலையீடு அதிகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய வேலைத்தளம் இணையதளத்தின் சகோதர தளமான வெடபிமவிற்கு வழங்கிய செவ்வி கீழே தரப்பட்டுள்ளது.

*மருத்துவர்கள் மாற்றம் தொடர்பான கொள்கைக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே… அது உண்மையா?

ஆம்…. வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விடய பொறுப்பு அமைச்சர்கள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகள், மனைவிமார் உட்பட குடும்ப உறவினர்களுடைய தலையீடும் அதிரித்துள்ளது. இதற்கு எதிராக தான் நாம் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மருத்துவர் இடமாற்ற கொள்கை சுகாதார சேவையில் பொதுவான பிரச்சினையா?

ஆம்…. அது பொதுவாவது எவ்வாறு என்று விளக்கமளிக்க முடியும். சுகாதார சேவை தொடர்பாக கவனம் செலுத்தும் போது விசேடமாக இரு விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் அதன் சிறப்புத் தன்மை. இரண்டாவது சமத்துவம். சிறப்புத் தன்மையை நோக்கும் போது நாட்டில் ஒரு பிரதேசத்திற்கு ஒரு விதமாகவும் வேறு பிரதேசத்திற்கு இன்னொரு விதமாகவும் இருக்க முடியாது. வசதியான பிரதேசங்களை போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சமத்துவம் பேணப்படவேண்டும். கொழும்பை போன்றே ஏனைய பிரதேசங்களிலும் மருத்துவர்களை நியமிக்கும் போது சமத்துவம் பேணப்பட வேண்டும். கொழும்பில் உள்ள சுட்டியை போன்றே தூர பிரதேசங்களின் சுட்டியும் சமனானதாக இருக்க மருத்துவர்களை நியமிக்கும் போது அதற்கு கொள்கையொன்றுள்ளது. நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கொழும்பு பிள்ளைகளின் நோயெதிர்ப்பு சக்தி 95 வீதமாக காணப்பட்டது. அதற்கு சமனான நோயெதிர்ப்புச் சுட்டியே யுத்த பிரதேசங்களிலும் காணப்பட்டது. இதனால் யுத்தம் நிலவும் போது அரசாங்கம் யுத்த வலயங்களில் அரச மருத்துவர்களை இடமாற்றம் செய்வதில்லை. இதனால் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிதி, வாகனம் அல்லது வேறு வரப்பிரசாதங்கள் வழங்கி இவ்வாறான பிரதேசங்களில் பணியாற்ற மருத்துவர்களை இணங்கச் செய்தனர். இவ்வாறான ஒரு நிலையில் கூட அரச மருத்துவர்களை யுத்த பிரதேசங்களில் நியமிக்க நாம் வலியுறுத்தினோம். அதற்கமைய நாம் உலகிற்கே நாம் முன்மாதிரியாக திகழ்ந்தோம். இவ்வாறான தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்தும் சந்தர்ப்பத்தில் கூட மருத்துவர்களின் வரப்பிரசாதங்களை போன்று பொதுவாக நாட்டு மக்களின் வரப்பிரசாதங்களையும் பாதுகாக்கும் வண்ணம் நாம் போராட்டங்களில் ஈடுபட்டோம். ஏதாவது ஒரு விஞ்ஞான ரீதியான அடிப்படையில் நாட்டில் நன்மை பயக்கும் வண்ணம் செயற்பட்டுள்ளோம். அதனால் மருத்துவர் இடமாற்றம் நாட்டுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பது புரிந்திருக்கும்.

வெளிநாடுகளில் இவ்வாறான முன்மாதிரிகள் காணப்படுகிறதா?

அவுஸ்திரேலியா போன்ற உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட பிரச்சினையுள்ள பிரதேசங்களில் வைத்தியர்களை அனுப்புவது என்பது சுலபமான விடயமல்ல. அதனால் அந்த நாடுகளில் அதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ‘ ஏரியா ஒப் நீட்ஸ்’ என்பது அவ்வாறான ஒன்று. மருத்துவர்கள் செல்ல விருப்பமற்ற பிரதேசங்களில் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி வழங்குவதும் இதில் உள்ளடங்குகின்றது. எமது நாட்டில் அவ்வாறான வேறு வரப்பிரசாதங்கள் இன்றி கூட சிறந்த வைத்திய சேவையை வழங்குவதற்கு இடமாற்ற கொள்கையே பிரதான காரணமாகும்.

நிகழ்கால பிரச்சினை எவ்வாறு ஆரம்பித்தது?

நாட்டின் ஏனைய துறைகளில் நிலவும் பிரச்சினை என்னவென்றால் முறையாக இடமாற்ற கொள்கையை கொண்டு செல்ல முடியாமல் நிகழும் அரசியல் தலையீடுதான். சுகாதார சேவையில் அரசியல்வாதிகள் இது குறித்து அதிகம் தலையிடாமல் இருந்தமையினால் இவ்வளவு தூரம் எம்மால் வரமுடிந்தது. இவ்விடமாற்ற கொள்கையில் எமது அங்கத்தவர்களையும் சமமாகவே கருதுகிறோம். நான் சங்கத்தில் தலைவராக இருந்த போதிலும் இம்முறை எனக்கும் பொதுவானது. இது அடிப்படைக் கொள்கையாகும். இவ்விடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வ உரிமை காணப்பட்ட போதிலும் தாபன சட்டதிட்டத்திற்கமைய அதன் உத்தியோகபூர்வ பங்காளிகள் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கமே. அதனால் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த எமது கையெழுத்து அவசியம். தற்போது வரலாற்றில் என்றுமே நடக்காத விடயம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அமைச்சர் மட்டுமன்றி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் இதில் தலையிடுகின்றனர். இக்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது மிகவும் துரதிஷ்டமான நிலை. நாம் இந்நாட்டில் என்றுமே சிறப்பான சுகாதார சேவையை வழங்க எம்மால் முடிந்தளவு உயர்ந்த சேவையை வழங்கியவர்கள். அதனால் எந்தவகையிலும் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு தலையீடுகள் இடம்பெற்றால் எங்கு சென்று முடியுமோ தெரியாது. அப்படி நடந்தால் ஏனைய துறைகளைப் போன்றே சுகாதார சேவையிலும் பிரச்சினைகள் தோன்றும். வெள்ள அனர்த்தத்தின் போது உரிய இடத்தில் மருத்துவர்களை நியமித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டது. இங்கு நாம் பெனர்களை வைத்து பிரபலப்படுத்திக்கொண்டு பணியாற்றவில்லையென்பது உண்மை. எனினும் மக்களுக்கான சேவை உரிய முறையில் வழங்கப்பட்டது.

இதுதொடர்பில் விடய பொறுப்பு அமைச்சர் வைத்திய அதிகாரிகள் சங்கம் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஏன் அவ்வாறு கூறுகிறார்?

ஆம், அமைச்சர் அவ்வாறுதான் கூறுகிறார். இது தலையீடல்ல. தாபன கொள்கைக்கமைய இது எம்முடைய பொறுப்பு. இதில் தலையீடு செய்வது சுகாதார அமைச்சரும் அவருடைய குடும்பத்தினரும்தான். அந்த இடத்தில் தான் இந்த பிரச்சினையுள்ளது. இடமாற்ற கொள்கையில் அமைச்சர்களின் தலையீடுகளினால் வரலாற்றில் எப்போதுமே இப்போது போன்று 10-12 மாதங்கள் சென்றதில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒரு இடத்திற்கு செல்லவேண்டிய மருத்துவ அதிகாரி இன்னமும் செல்லவில்லை. பட்டியல் தயாரிக்கும் போது சுகாத அமைச்சின் அனைத்து மருத்துவமனைகளின் வைத்தியர்களும் ஒன்றிணைந்து எமது 106 கிளைகளின் செயலாளர்கள் இணைந்து இடமாற்றசபையில் பணியாற்றுகின்றோம். சுமார் 200 பேருள்ள குழு இணைந்து மிக பொருத்தமான இடமாற்றத்திற்கான இணக்கப்பாட்டுக்கு வருகிறோம். அவ்வாறு முறையாக, சட்டதிட்டங்களுடன் பணியாற்றும் போது, அந்த பட்டியலை ஒரு பேனையால் வெட்டி விட்டு அவரை அங்கு மாற்றுங்கள், இவரை இங்கு மாற்றுங்கள் என்று உத்தரவிட்டால் அந்த சேவையின் சிறப்புத் தன்மையை பாதுகாக்க முடியாது. உதாரணத்துக்கு கூறுவோமாயின் வடக்கு கிழக்கில் பணியாற்றும் மருத்துவர்கள் வேறு மாகாணங்களுக்கு மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாயிருக்கலாம். எனினும் அவ்வாறு செய்ய முடியாது. இதற்கு முன்னர் அமைச்சர்களின் பிள்ளைகள் கூட அவ்வாறு இடமாற்றம் செய்துக்கொண்டதில்லை. யுத்தம் நிகழ்ந்த காலங்களில் நாட்டின் பிரதான அமைச்சர்கள் இருவரின் பிள்ளைகள் வடக்கு கிழக்கில் பணியாற்றினார்கள். அவர்கள் அவர்களுடைய நியமனத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

இந்நிலை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?

நாம் இப்போது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இன்று (31) நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இனிதான் அதன் விளைவு தீர்மானிக்கப்படும். இன்று மத்திய குழுக்கூட்டம் நடைபெறும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435