ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த காலப்பகுதிக்குள் தென்கொரியாவிற்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தவறியதையடுத்து தொழில்வாய்ப்பை பெற்றிருந்த 11 பேர் வாய்ப்பை இழந்துள்ளனர்.
பணிய அதிகாரிகளின் கவனயீனத்தினால் இத்தவறு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த 11 பேரும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தமது வாய்ப்பிற்கான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த 11 பேரும் கொரிய மொழி பரீட்சையில் தோற்றி சித்தி பெற்றிருந்ததுடன் தேவையான பயிற்சிகளையும் முடித்து அவசியமான பணத்தையும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த 11 பேரும் மீண்டும் கொரிய மொழி பரீட்சையில் தோற்றி, பயிற்சி பெறுவதுடன் பணமும் செலுத்தவேண்டியிருப்பதாக பணியகத்தில் இருந்த கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கொரிய மனித வளம் தொடர்பான திணைக்களத்திடம் குறித்த நபர்கள் விசாரித்த போதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தாமதத்தினால் குறித்த 11 பேரும் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர் என்று அறிய கிடைத்துள்ளது.
தென் கொரிய வேலைவாய்ப்பிற்காக பலர் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறாக வாய்ப்பை பெற்றவர்கள் கவனயீனத்தினால் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மேலும் பெரும் பொறுப்புடைய அரச நிறுவனம் என்றவகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதை விடவும் செயற்பாட்டுடன் இருப்பது அவசியம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வேலைத்தளம்