மினி பஸ்களை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை டுபாய் அரசு தடைசெய்துள்ளது.
இன்று (30) காலை இடம்பெற்ற மினிபஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தயைடுத்து உடனடியாக இத்தடை அமுலுக்கு வந்துள்ளது.
14 இருக்கைகளைக் கொண்ட மினி பஸ்கள் பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. குறுகிய தூரங்களுக்கு பொதிகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால்தான் அதில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.
கம்பனிகள், ஹோட்டல்கள், மற்றும் சூப்பர் மார்க்கட்டுக்களில் பணியாற்றும் குறுகிய சம்பளத்துடன் கூடிய தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு இம்மினி பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மரணத்தின் பிடிக்குள் மக்களை கொண்டு செல்கின்றன. எதிர்வரும் 2023ம் ஆண்டளவில் மினி பஸ்களை கொள்வனவு செய்வது முற்றாக நிறுத்தப்படும். 2021ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் மாணவர்களின் போக்குவரத்துக்கு மினி பஸ் பயன்படுத்துவது தடை செய்யப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மினி பஸ்களின் பயன்பாடு முற்றாக தடை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமது அறிவுறுத்தலை உடனடியாக கவனத்திற்கொண்டு மினி பஸ்களை பயணிகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.