பெரும்பாலும் உலகிலுள்ள அனைவரும் கொவிட் 19 தடுப்பு மருந்தை இன்னும் 10 மாதங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.
COVID-19 க்கு எதிராக 90 சதவிகிதத்திற்கும் மேலாக பயனுள்ள முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய பெருமை ஜேர்மன் பயோடெக் நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் பிஃப்சியர் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பொறுமையின் அவசர தேவை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்வரும் 3 மாதங்களுக்குள் மிக குறைந்த அளவிலேயே கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என்று டொக்டர் சாஹின் கட்டாரை தளமாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமான அல் ஜசீராவில் வழங்கியுள்ள செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருவரும் சமூக இடைவௌியை கடைப்பிடிக்க வேண்டும். தம்மையும் தனது குடும்பத்தினரையும் ஆபத்தில் ஆழ்த்தி விடாதிருக்கவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நாம் ஒரு சிறந்த நிலையில் இருப்போம். ஏனெனில் அஸ்ட்ரா செனேக்கா உட்பட பல நிறுவனங்கள் தடுப்பு மருந்தை வைத்திருக்கும். பல நிறுவனங்கள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நாம் நிறைய தடுப்பு மருந்துகளை வைத்திருப்போம். பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியளவில் குறைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இப்பிரச்சினையை எம்மால் முற்றாக நீக்க முடியும். அதற்கு இன்னும் 19 மாதங்கள் உள்ளன.
இந்த தடுப்பு மருந்து செயற்றிறன் மிக்கது என்பதை தற்போது உலகம் அறியும். அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் நிலைமை முன்னேற்றமடையும் என நான் நம்புகிறேன். 2021ம் ஆண்டு செப்டெம்பர் அளவில் நிலைமை 80 வீதம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் டொக்டர் உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.