மிக அவதானத்துடனும் பொறுப்புடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் முன்னைய தவறுகளுக்கான அபராதங்களுக்கு கழிவுகளை வழங்க துபாய் அரச தீர்மானித்துள்ளது.
பல மாதங்கள் ஒழுங்கான முறையில் வீதி சட்ட விதிகளை பின்பற்றும் சாரதிகளினால் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையிலான தவறுகளுக்கு இவ்வாறு கழிவுகள் வழங்கப்படும் என்று துபாய் பொலிஸின் தலைமை கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் கலீபா அல் மார்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும் சாரதிகள் வீதி சட்ட விதிகளை மதிப்பது மற்றும் விபத்துக்களிலிருந்த தம்மை பாதுகாத்துக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இப்புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று மாதங்களுக்கு எவ்வித வீதி விதி மீறல்கள், விபத்துக்கள் இன்று வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு ஏற்கனவே உள்ள அபராதங்களுக்கு 25 வீத கழிவுகளை வழங்குவதாக துபாய் பொலிஸார் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர். ஆறு மாதங்களுக்கு பிரச்சினையின்றி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 வீத கழிவும் 9 மற்றும் 12 மாதங்களுக்கு முறைப்பாடுகளின்றி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு முறையே 75 மற்றும் நூறு வீத கழிவுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கழிவுகள் வருமாறு;
1. வீதி சட்டவிதிகளை 3 மாதங்களுக்கு ஒழுங்காக கடைப்பிடிப்பவருக்கு 25 சதவீத கழிவு
2. வீதி சட்டவிதிகளை 6 மாதங்களுக்கு ஒழுங்காக கடைப்பிடிப்பவருக்கு 50 சதவீத கழிவு
3. வீதி சட்டவிதிகளை 9 மாதங்களுக்கு ஒழுங்காக கடைப்பிடிப்பவருக்கு 75 சதவீத கழிவு
4. வீதி சட்டவிதிகளை 12 மாதங்களுக்கு ஒழுங்காக கடைப்பிடிப்பவருக்கு 100 சதவீத கழிவு