பணிக்கொடை (gratuity) அனைவருக்கும் உரியது, அறிவீர்களா?

நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்னர் விலகிச் செல்லும் போது பணிக்கொடையினை பெறும் உரிமைக்கு உரித்துடையவராகின்றனர். எனினும் பணிக்கொடை பெறுவதற்கான உரிமை தகமை தொடர்பில் நாம் அதிக விடயங்களை அறிந்து வைத்திருப்பதில்லை.

வாசகர் மத்தியில் பணிக்கொடை தொடர்பாக நிலவும் சந்தேகங்களுக்கான விலக்கங்களையும் சட்டரீதியான உரிமைகளையும் விலக்குவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பணிக்கொடை வழங்கல் தொடர்பில் இலங்கையில் நிலவும் சட்ட ஏற்பாடுகள் எவை?

ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது தொடர்பாக எமது நாட்டின் ஏற்புடைய சட்டமாவது 1983இன் 12 ஆம் இலக்க பணிக்கொடை வழங்கும் சட்டமாகும். இங்கு தொழில்தருநர் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டிய முறை, அளவு என்பன திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கொடை வழங்குவதற்கு ஏற்புடைய சட்டத்திற்கு அமைய எந்த வகை ஊழியர்கள் இதில் உள்ளடக்கப்படுவர்? பணிக்கொடை எவ்வாறு கணக்கீடு செய்யப்படும்?

ஒரு ஊழியரின் சேவையை முடிவுறுத்துவதற்கு 12 மாதங்களுக்கு முன்னரான கால எல்லைக்குள் 15 ஊழியர்களோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையினரோ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்திலும் தொழில்தருநரால் மேற்படி ஊழியர் 5 ஆண்டுகளுக்கு குறையாத காலம் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்படாவிடில், மேற்படி ஊழியர் சேவை செய்த கால எல்லையின் சார்பில் சேவையை முடிவுறுத்தி 30 நாட்களுக்குள் கீழே குறிப்பிட்டவாறு பணிக்கொடையை கணக்கீடு செய்து வழங்கப்படும்.

மாதாந்த அடிப்படையில் சம்பளம் அல்லது கொடுப்பனவு பெறும் ஊழியர் ஒருவரின் சேவையை முடிவுறுத்தினால், அவ் ஊழியர் பெற்ற சம்பளம் அல்லது கொடுப்பனவின் அரை பங்கு அவர் சேவை செய்த சகல ஆண்டுகளுக்காகவும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.

வேறு அடிப்படையில் சம்பளம் அல்லது கொடுப்பனவு சம்பளம் அல்லது கொடுப்பனவு பெறும் ஊழியரானவர் கடைசியாக அவர் பெற்ற சம்பளத்தை அல்லது கொடுப்பனவை கணக்கிடு செய்து அதன் விகிதாசாரத்திற்கு அமைய 14 நாட்களுக்குச் செலுத்த வேண்டிய அளவு பணத்தைப் போல சேவையில் ஈடுபட்ட ஒவ்வொரு ஆண்டிற்கும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.

துண்டு வேலைகளுக்கு அமைய சம்பளம் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு சேவை செய்யும் ஊழியர் ஒருவருக்கு அந்த வேலை முடிவதற்கு முன்னர் இறுதி மூன்று மாதங்களில் உழைத்த சம்பளம் அல்லது வேதனத்தின் மொத்த கூட்டுத்தொகை அக்கால கட்டத்தில் மேற்படி ஊழியர் வேலை செய்த நாட்களால் பிரிக்கும் போது கிடைக்கும் விடையை 14ஆல் பெருக்கினால் கிடைக்கும் கூட்டுத்தொகை மேற்படி வேலையாள் வேலை செய்த ஒவ்வொரு வருடத்திற்குமுரிய பணிக்கொடையாக செலுத்தப்பட வேண்டும்.

15 ஊழியர்களை விடக் குறைந்த வேலைத்தளங்களில் பணியாற்றும் ஊழியரின் சேவையை முடிவுறுத்துவதாயின் பணிக்கொடையை பெறமுடியாதா?

இங்கு ஓர் ஊழியர் தான் சேவையில் ஈடுபட்டமையை முடிவுறுத்துவதற்கு முன்னர், 12 மாதகாலம் 15 ஊழியர்களுக்குக் குறைய எண்ணிக்கை சேவையில் ஈடுபடுத்தியிருந்தால், தொழில்பிணக்குச் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் கீழ் நியாயமானதும், நீதியானதுமான அடிப்படையின் கீழ் தொழில் நீதிமன்றத்தின் மூலம் பணிக்கொடை கோர முடியும். இங்கு தொழில் நீதிமன்றம் மேற்படி ஊழியருக்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் காரண காரியங்களுக்கு அமைய பணிக்கொடை உரித்தாகுமா என்ற விடயத்தை தீர்மானிக்கும்.

பணிக்கொடை உரிமையில்லாத ஊழியர்கள் யார்?

தனிப்பட்ட வீடொன்றின் வீட்டு வேலையாள் அல்லது தனிப்பட்ட சாரதி, பங்களிப்புச் செய்யாத ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுடைய ஊழியர்கள் பணிக்கொடைக்கு உரித்தாக மாட்டார்கள்.

தனக்குரிய பணிக்கொடைக்கான உரிமையை இல்லாதொழிக்க முடியுமா?

பணிக்கொடையை இல்லாதொழிக்க வேண்டுமென சட்டத்தால் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ள சந்தர்ப்பங்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் அதனை செய்ய முடியாது. மோசடி, முறைக்கேடான நிதிப் பயன்பாடு, தொழில்தருநரின் சொத்துக்களுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்தல் அல்லது தொழில்தருநரின் பண்டங்கள், பொருட்கள் அல்லது சொத்துக்களுக்கு நட்டம் ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், ஊழியரின் சேவை முடிவுறுத்தப்படும் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சேதம், அல்லது நட்டத்தின் அளவுக்கமைய குறிப்பிட்ட ஊழியரின் பணிக்கொடையை செல்லுபடியற்றதாக்க முடியும். 15 ஊழியர்களுக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் இத்தகைய பணிக்கொடை இல்லாததொழிப்பது தொடர்பாக ஓர் பிணக்கு அது சம்பந்தமான தீர்ப்பினைப் பெறுவதற்காக தொழில் நீதிமன்றமொன்றிற்கு கோரிக்கை விடுத்த விண்ணப்பப்படிவம் ஒன்றை அனுப்ப முடியும்.

தொழில்தருநர் குறிப்பிட்ட பணிக்கொடையை செலுத்த மறுப்பாரேயாயின் என்ன நடக்கும்?

குறிப்பிட்டதொரு தொழில்தருநர் குறித்துரைக்கப்பட்டவாறு பணிக்கொடையை செலுத்துவதை புறக்கணித்தால், ஊழியர் அதுபற்றிய முறைப்பாட்டை தொழில் ஆணையாளருக்கு முறையீடு செய்ய வேண்டும். தொழில் ஆணையாளர் அதன் பின்னர் மேற்கொள்ளும் விசாரணையின் பின்னர் திருப்தியடைவாரேயாயின், தொழில்தருநரிடம் இருந்து ஊழியருக்குக் கிடைக்க வேண்டிய பணத்தைக் குறிப்பிட்ட, குறித்துரைக்கப்பட்ட நீதிமன்ற அதிகாரம் உடைய நீதவான் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யும் சான்றிதழ் மூலம் வழக்குத் தொடர முடியும். குறிப்பிட்ட பணத்தைச் செலுத்துமாறு கட்டளை விடுக்கவோ அலலது தண்டப்பணத்தைச் செலுத்துமாறு பணிக்கவோ அல்லது சிறைத்தண்டனை விதிக்கவோ நீதவானுக்கு அதிகாரம் உண்டு. இது தொடர்பாக செயற்படுவதற்கு ஓர் தொழில் சங்கத்தினதோ அல்லது இவ்விடயம் தொடர்பாக விளக்கம் கொண்ட ஒரு நபரின் ஒத்துழைப்பை பெற முடியும்.

பணிக்கொடை செலுத்தத் தாமதமாயின் இத் தாமதம் குறித்து தொழில்தருநர் செலுத்த வேண்டிய தண்டப்பணம் எவ்வளவு?

– பணிக்கொடை செலுத்த வேண்டிய இறுதித் திகதியில் இருந்து ஒரு மாதத்திற்கு மேற்படாத காலத்திற்கு நிலுவை இருப்பின் செலுத்த வேண்டிய பணிக்கொடை 10 % மிகை விதிப்பு ஆகும்.

– பணிக்கொடை செலுத்துவதற்குரிய இறுதித் திகதியில் இருந்து ஒரு மாதத்திற்கு மேல் 3 மாத கால எல்லைக்குக் குறைவாயின், செலுத்த வேண்டிய பணிக்கொடை மீது 15 % மிகை விதிப்பு செலுத்த வேண்டும்.

– பணிக்கொடை செலுத்த வேண்டிய இறுதித் திகதியில் இருந்து 3 மாதங்களுக்கு மேல் 6 மாதங்களுக்கு குறைவாயின் நிலுவையில் உள்ள பணிக்கொடை மீது 20% மிகை விதிப்பு செலுத்த வேண்டும்.

– பணிக்கொடை செலுத்த வேண்டிய இறுதித் திகதியில் இருந்து 6 மாதத்திற்கு மேல் 12 மாதத்திற்கு உட்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய நிலுவைப் பணிக்கொடை மீது 25 % மிகை விதிப்பு தண்டப்பணம் செலுத்த வேண்டும்.

– பணிக்கொடை செலுத்த வேண்டிய இறுதித் திகதியில் இருந்த 12 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் நிலுவையில் உள்ள பணிக்கொடை மீது 30% மிகைவிதிப்பு தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டும்.

மேலே செலுத்த வேண்டிய இறுதித் திகதியென குறிப்பிடப்படும் பணிக்கொடை வழங்க வேண்டிய ஊழியரின் சேவை முடிவுறுத்தப்பட்ட திகதியில் இருந்து கணக்கீடு செய்யப்படும் 30 நாள் கால எல்லையாகும்.

பணிக்கொடை தொடர்பாக அறிய வேண்டிய வேறு விடயங்கள் என்ன?

இந்த பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய பணிக்கொடை, மேற்படி ஊழயர் இறந்தபட்சத்தில் அவ் ஊழியரின் உரித்தாளிக்குச் செலுத்த வேண்டும்.

5 ஆண்டு காலத்திற்குள் சேவை நிலையத்தின் உரிமை புதிய தொழில்தருநருக்கு மாற்றப்பட்டு இருந்தால் முன்னைய தொழில்தருநரின் பொறுப்பும் புதிய தொழில்தருநரின் மீது சுமத்தப்படும். சேவையில் இருந்து நீங்குவதற்கு வழங்கப்படும் நஷ்டஈடு காரணமாக, பணிக்கொடை செலுத்துவதற்குள்ள பொறுப்பை நீக்குவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்ககோ முடியாது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435