மலேஷியாவின் பிரமாண்டமான விவசாயத் தொழிற்சாலையான சைம் டர்பி பிளாண்டேஷன் நிறுவனத்தில் 5000 வேலைவாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்க அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் ஆலோசனைக்கமைய வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மன் அமேகுணவர்தன மற்றும் சைம் டர்ட் நிறுவனத்தின் உப தலைவர் நஜீப் வஹாப் ஆகியோர் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன் முதற்கட்டமாக 500 பேருக்கு மலேஷியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 800 பேருக்கு நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 500 பேர் மலேஷிய நிறுவனத்தில் பணிக்காக செல்ல தகுதி பெற்றுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விமானசீட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன் மிக விரைவில் தொழில் நிமித்தம் குறித்த நபர்கள் மலேஷியா அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இப்பணியாளர்களும் மாதாந்தம் 55,000 ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை சம்பளமாக வழங்கப்படும் என்றும் மேலதிக தொழில்வாய்ப்புக்கள் வழங்குவதற்கான நடவடிக்கை அமைச்சரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் லஷ்மன் அபேகுணவர்தன தெரிவித்தார்.
வேலைத்தளம்