சட்டவிரோதமாக வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தல், பாதுகாத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு 100,000 சவுதி ரியால் அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய கடவுச்சீட்டு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படும். அத்துடன் 100,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படுவதுடன் 5 வருடத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தடை செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள், துன்புறத்தல்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையிலான நடவடிக்கைகள் நடைபெறுவதையறிந்தால் உடனடியாக 989 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம்.
அதேபோல், காணாமல் போகும் பணிப்பெண்கள் தொடர்பில் தொழில் வழங்குனர் உள்விவகார அமைச்சினூடாக முறைப்பாடு செய்யலாம் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.