புகையிரத கடவை காப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது மிகவும் அவசியம். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று வட மாகாண புகையிரத கடவை காப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரோகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாம் நிரந்தர நியமனம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இன்னமும் எமக்கு தீர்வொன்று கிடைக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து மூன்று வாரங்களில் தெரிவிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் சுமார் 3600 புகையிரத கடவை காப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். வடமாகாணத்தில் மட்டும் 450 பேர் உள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, நலிவுற்ற இளைஞர்களும் முன்னாள் போராளிகளுமே இச்சேவையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்களுடைய நிலையை கவனத்திற்கொண்டு அரசாங்கம் செயற்படவேண்டும்.
நாம் பொலிஸாரின் கீழ் அடிமைகள் போன்று பயன்படுத்தப்படுகிறோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்