அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள்” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி இன்று வெளிவருகின்றது.

நிர்வாக சட்டம் – அறிமுகம்
அரசாங்கமானது மக்களின் நன்மதிப்பைப் பெற நிர்வாகத்துறையினரின் வினைத்திறனான செயற்பாட்டிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அரசாங்கம் உள்நாட்டு ஓழுங்கை பேணுவதையும் நாட்டைப் பாதுகாப்பதையும் மட்டும் அதன் கடமையாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அவை சமூக நலன்புரியில் கவனம் செழுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும். அரச நிறுவனங்களுக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்கும் முறைகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கியதே நிர்வாகச் சட்டமாகும் என பரந்தளவில் கூறமுடியும்.

பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்ற தீர்ப்புக்கள் மூலம் நிர்வாகச்சட்டம் மேலும் விருத்தி செய்யப்பட்டு அது தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றம் சட்டமாக்குவதாலோ, அச்சட்டத்தை நீதிமன்றம் பொருள்கோடல் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதாலோ அரசாங்கத்தின் நோக்கம் இறுதி நிலையை அடைந்துவிடாது.

இவ்விரு அமைப்புக்களையும் தவிர குறித்த துறையில் தேர்ச்சி பெற்ற நிர்வாகத்துறையினரிடம் அல்லது அதன் அங்கங்களான கீழ்நிலை அமைப்புக்களிடமோ சட்டவாக்க அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கலாம்.

மேலும் மக்கள் சேவையை விரிவாக்குவதற்கும் முன்னேற்றுவதற்கும் பல அரச முகவர் நிலையங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன.

அதாவது,உள்ளுராட்சிசபை, திணைக்களம், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுக்கள் போன்றவற்றுக்கு சட்டவாக்க அதிகாரங்கள் வழங்கப்படலாம்.

இவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கையில் அதன் செயற்பாடுகளால் பொதுமக்களின் அடிப்படை மற்றும் குடியியல் உரிமைகள் பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமாயுள்ளது.

நியதி சட்டமொன்றின் குறித்த ஏற்பாட்டை மீறாமல் நிர்வாக அதிகாரிகள் செயற்படுதல் மட்டுமல்லாமல் சட்டவாக்கத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றுவது போல் முடிவு அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.

அரச நிர்வாகத்துறையினரால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் சட்டவலிதுடைமை பொதுமகன் ஓருவரால் கேள்விக்குட்படுத்தப்படுதல் நிர்வாக சட்டத்தின் அடிப்படையாகும். அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்பது தொடர்பில் அபிவிருத்தியடைந்த முக்கிய நிர்வாகச் சட்ட கோட்பாடுகள், வரம்பு மீறல் இடம்பெறும் போது அவற்றுக்கான நிவாரணங்கள் மற்றும் தீர்வுகள் போன்றவை பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.

நிர்வாக சட்ட கோட்பாடுகள்

அண்மைக்காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் நிர்வாகச் சட்டக் கோட்பாடுகள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புபட்டவையாகும்.

1) வலுவிகழ்தல் கோட்பாடு (Doctrine of Ultra Vires)
2) இயற்கை நீதிக் கோட்பாடு (Doctrine of Natural Justice)
3) நீதிமுறை மீளாய்வு கோட்பாடு (The Doctrine of Judicial Review)
4) தர்க்க முரண்பாட்டுக் கொள்கை (The Doctrine of Reasonableness)
5) முறையான எதிர்பார்க்கை கோட்பாடு (The Doctrine of Legitimate Expectation)
6) சட்டவாட்சி கோட்பாடு (The Doctrine of Rule of Law)
7) நல்லாட்சி கோட்பாடு (The Doctrine of Good Governance)
8) பொறுப்பு கூறல் கோட்பாடு (The Doctrine of Accountability)
9) வலு வேறாக்கல் கோட்பாடு (The Doctrine of Separation of Powers)

இந்த தொடரில் மேற்குறித்த கோட்பாடுகள் ஒவ்வொன்றாக சுருக்கமாக ஆராயப்படும்.

வலுவிகழ்தல் கோட்பாடு

வலுவிகழ்தல் கோட்பாடானது நிலைமுறை அதிகார வரம்பு மீறல், நடைமுறை அதிகார வரம்பு மீறல் என வகைப்படுத்தப்படும்.

இதனைத்தவிர சரியான விடயத்தை பொருத்தமான வழியில் பிழையான நோக்கத்திற்காக செய்தலும் வலுவிகழ்தலாகவே கருதப்படும். நியதிச் சட்டத்தின் நோக்கம், அதன் எல்லையை கருதாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் முதலாவது வகையாகும்.

இங்கு நியதிச்சட்ட ஏற்பாடுகளின் படி நிர்வாக செயல் செய்யப்பட்டதா என பார்க்கப்படுமே தவிர அச்சட்டத்தை இயற்றிய அதிகார அமைப்பின் அதிகார தன்மை பற்றி கவனத்தில் எடுக்காது.

இந்திய வழக்கொன்றில் மாநில அரசானது தேயிலை பயிரிடுவதற்காக நிலமொன்றை மாற்றிக்கொடுக்க மறுத்தமை நியதிச்சட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படாததால் வலுவிகழ்தல் என கூறப்பட்டது.

அதிகாரசபையொன்று சட்டத்தால் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படாத துணி சலவை தொடர்பான சேவையை வழங்கியமை வலுவிகழ்தலாகும். பொலீஸ்மா அதிபர் தனக்கு அதிகாரம் வழங்கப்படாத இடமாற்றம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்தமை வரம்பு மீறலாகும். அனிஸ்மினிக் வழக்குக்கு முன்னர் நியாயாதிக்க எல்லைக்குள் செய்யப்பட்ட தவறுகள் வலுவிகழ்தலாக கருதப்படவில்லை.

இது பதிவேட்டின் முகத்தோற்றத்திலுள்ள தவறுகள் எனும் கோட்பாட்டின்படி (Error of Law on the Face of the Record) கையாளப்பட்டது.

இதன்பின்னர் வந்த வழக்குகளில் அனிஸ்மினிக் விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்க்கில் நீதியரசர் றீட், கெட்ட நோக்கம், இயற்கை நீதி மீறல், நல்ல நோக்கமெனினும் ஏற்பாடுகளை தவறாக பொருள்கோடல் செய்தல், கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுக்காமை போன்ற காரணங்களால் வலுவிகழ்தல் ஏற்படுமென கூறினார்.

இதன்படி நியாய சபைகளின் நியாயாதிக்கற்திற்குள் இடம்பெறும்; தவறுகள் வலுவிகழ்தலாகும். கீழ் நிலை நீதி மன்றங்களின் நிலை தொடர்பாக வழக்குகளில் முரண் நிலை காணப்படுகின்றது.

ஆனால் உயர்நிலை நீதி மன்றங்களின் நியாயாதிக்கற்திற்குள் விடப்படும் தவறுகள் மீளாய்வு மூலம் சீர்செய்ய முடியாது. நியதிச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே மேன்முறையீடு செய்யமுடியும்.

கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போது அதனை கவனத்தில் எடுக்காத நிலையில் நடைமுறை அதிகார வரம்பு மீறல் நிகழும்.

கல்வி ஆணைக்குழுவால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட அறிக்கையை கருத்திலெடுக்காமல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானமானது வரம்பு மீறலாகும். சம்பள உயர்வுக்காக செய்யப்படும் மதிப்பீட்டு முறைமை சரியான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படாமையால் வெற்றாக்கப்பட்டது.

கையளிப்பு செய்யப்பட்ட சட்டவாக்கம் வலுவிகழ்ந்ததா என தீர்மானிக்க நீதிமன்றமானது சட்டவாக்கத்தின் பின்னணி, பாராளுமன்ற மன எண்ணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தும். கையளிப்பு சட்டவாக்கமொன்றின் வலிதுடைமை தொடர்பில் முடிவெடுக்க சில சட்டக் கொள்கைகளை விருத்தி செய்துள்ளது.

வரிவிதிப்பு, நீதிமன்றத்ததை நாடுவதற்கான வழிவகைகள், மீள் கையளிப்பு, பின்னோக்கியாழும் சட்டம், நிச்சயத்தன்மை, நியாயபூர்வ தன்மை, முரண்பாடு, முறையற்ற நோக்கம் போன்ற கொள்கைகளே அவையாகும்.

நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது. இருபுறம் கேட்டல் விதி, பக்கச்சார்புக்கு எதிரான விதி எனும் இரு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.

இயற்கை நீதி கோட்பாட்டை பற்றி பகுதி 2 இல் தெளிவு படுத்துகின்றோம்.

(தொடரும்)

 

நன்றி – Tamil breaking news

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435