சமூக வலைத்தளத்தினூடாக இஸ்லாம் மதத்தை குறித்து தவறாக கருத்து பகிர்ந்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 500,000 இலட்சம் திர்ஹம் அபராதம் விதித்துள்ளது டுபாய் நீதிமன்றம்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாதுகாவலர்களாக பணியாற்றிய 28 – 34 வயதுக்குட்பட்ட மூன்று இலங்கையர்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் அவர்களுடைய அபராதத் தொகையை செலுத்திய உடனே நாடு கடத்துமாறும் டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 19ம் திகதி இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு எதிரான முறைப்பாடு அல் பர்ஷா பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலுக்கு பொலிஸார் செல்லும்போது ஏற்கனவே உடன் பணியாளர்களினால் குறித்த இலங்கையர்கள் மூவரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களுடைய இருப்பிடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர்களுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் கைப்பற்றப்பட்டன.
சட்டக்காலக்கெடுவிற்குள் பிரதிவாதிகள் மேன்முறையீடு செய்யாமையினால் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.