தொழில் வழங்குநர்கள் தொடர்பான முறைப்பாடுகளை இணையதளத்தினூடாக ஆங்கில மொழியில் வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஓமான் மனித வள அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில் வழங்குநர்கள் மீதான முறைப்பாடுகளை வழங்குவதற்காக இணையதளமொன்றை ஓமான் மனித வள அமைச்சு கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்தது. ஜூலை மாதம் 31ஆம் திகதி இவ்விணையதளம் பரீட்சார்த்தத்தில் விடப்பட்டது. இக்காலப்பகுதியில் அரபி மொழியில் மட்டுமே முறைப்பாடு செய்யும் வசதிகள் காணப்பட்டன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (01) தொடக்கம் அவ்விணையதளத்தில் ஆங்கில மொழியிலும் முறைப்பாடு செய்யும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்விணையதளத்தினூடாக ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஓமானியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமது தொழில்வழங்குநர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை வழங்க முடியும் என்று உள்நாட்டு பத்திரிகையான ஓமானி டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்விணையதள சேவை எதிர்காலங்களில் சோஹார் மற்றும் சலாஹ் பிரதேசம் வரை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஓமான் மனித வள அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முகப்புத்தக பக்கமும் தற்போது பரீட்சார்த்தத்தில் விடப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் தொழில் வழங்குநர்களுக்கு எதிராக சுமார் 512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்