மது போதையில் வாகனமோட்டும் சாரதிகளுக்கெதிராக கடுமையான அபராதங்களை விதிக்க தென் கொரிய அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்த தேசிய பொலிஸ் முகவராலயம், குறித்த சட்டத்தின் கீழ் போதையில் வாகனமோட்டும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அபராதம் மட்டுமன்றி சிறைத்தண்டனை கூட அனுபவிக்க நேரிடலாம்.
சாரதி மட்டுமன்றி அவருடன் அமர்ந்து செல்லும் பயணியும் அபராதம் செலுத்த நேரிடும். ஏனெனில் அருகில் இருப்பவர் மது அருந்திய பின்னர் வாகனமோட்டுவதை ஊடக்குவித்தல் அல்லது கவனத்தில் கொள்ளாமையை தடுக்க இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ச்சியாக மது அருந்தும் சாரதிகளிடமிருந்து அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஒரு சாரதி ஐந்து வருட காலத்தில் ஐந்து தடவை போதையுடன் வாகனமோட்டி கைது செய்யப்படுவாராயின் அல்லது கைது செய்யப்படும் போது ஏற்கனவே போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்குள்ளாகியிருப்பாராயின் அல்லது ஏதும் வாகன விபத்து குற்றச்சாட்டுக்குள்ளாகியிருப்பாராயின் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
போதையில் வாகனமோட்டும் சாரதிகளை கண்டறிய பகல் நேர ரோந்து விரிவாக்கப்படும் என்று பொலிஸ் முகவராலயம் மேலும் தெரிவித்தது.
பொலிஸ் தகவல்களுக்கமைய கடந்த வருடம் மட்டும் தென் கொரியாவில் 240, 000 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் 583 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன் 42,880 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலைத்தளம்