கெரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான ஒருவர் தமது நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் நேற்று (28) அறிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வருகைத்தந்த குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுக்குள்ளான நபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரும் அவருடைய குடும்பத்தினரும் நேரடி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார தாபனத்தின் அறிவுரைகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுநோய் பரிசோதனை மையங்கள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் 24 மணிநேரமும் இயங்குவதாகவும் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உணரும்பட்சத்தில் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் இது குறித்து தமது அரசாங்கம் மிக அவதானத்துடன் செயற்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.