தோட்டப்பகுதி தபால் சேவையை விரிவுப்படுத்த விசேட பொறிமுறை தேவை

“ இலங்கையில் தபால்சேவை பலவழிகளிலும் வளர்ச்சி கண்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளுக்கான சேவையானது இன்னமும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. எனவே, அப்பகுதிக்கான தபால் சேவையை நவீன யுகத்துக்கேற்ப விரிவுப்படுத்தும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு தபால் சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

தோட்டப்பகுதிகளுக்கான தபால் சேவையை விரிவுப்படுத்துமாறு வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து கடந்த வாரம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையின் தபால் சேவைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கின்றது. தெற்காசியாவிலேயே முதலாவது தபால் புதைகயிரத சேவை இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டிவரையில் அதன் சேவை இடம்பெற்றுள்ளது.

காடு, மேடாக காட்சி தந்த மலையகத்தை வளம்மிக்க நாடாக மாற்றியது மட்டுமின்றி போக்குவரத்துக்கு தேவையான பாதைகளையும் எமது மலையக மக்களே கடின உழைப்பால் உருவாக்கினர். அதில் தொடருந்து பாதையும் உள்ளடங்கும்.

இவ்வாறு தபால் சேவைக்கு பிள்ளையார் சுழிபோட்ட – களம் அமைத்துக்கொடுத்த தோட்டப்பகுதி மக்களுக்கு இன்றைய நவீன உலகிலும் அதன் சேவை உரிய வகையில் சென்றடைவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை உட்பட மேலும் பல பகுதிகளில் இந்த அவலநிலை நீடிக்கின்றது.

இதை சர்வ சாதாரண விடயமாக கருதவேண்டாம். உரிய நேரத்தில் ஆவணங்கள் மற்றும் அறிவித்தல்கள் வந்து கிடைக்காததால் பலபேரின் தலைவிதி தலைகீழாக மாறியுள்ளது. சிலர் வாழ்க்கையையும் தொலைத்து தவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள், நீதிமன்ற கட்டளைகள் உட்பட முக்கியமான ஆவணங்கள் காலம் முடிவடைந்த பின்னரே கைகளுக்கு கிடைப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான், தபால் சேவையிலிருந்து தோட்டப்பகுதிகளை ஓரங்கட்டி, மக்களின் தலைவிதியுடன் தொடர்ந்தும் விளையாடவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

நகரங்களிலும், கிராமப்பகுதிகளிலும் தபால் சேவையானது உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மக்களின் நலன்கருதி உப தபால் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துறையில் இன்று 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

எனவே, நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில்வாழும் மக்களுக்கு கிடைக்கும் சேவை எமது தோட்டப்பகுதி மக்களுக்கும் உரிய வகையில் கிடைக்கவேண்டும். இதை வலியுறுத்தியே இன்று பிரேரணையை முன்வைக்கின்றேன்.

தோட்ட நிர்வாகத்திடம் கடிதங்களை ஒப்படைத்துவிட்டால் தமது கடப்பாடு முடிந்துவிட்டது என தபால் திணைக்களம் கருதுகின்றது. இது தவறாகும். முறையான தொடர்பாடல் இன்மையால் கடிதங்கள் தேங்கிகிடக்கின்றன.

ஆகவே, தோட்டப்பகுதிகளுக்கு தபால் சேவையை நவீன யுகத்துக்கேற்ப விரிவுப்படுத்த விசேட பொறிமுறையை உருவாக்குமாறு எனது கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தபால் சேவைகள் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன். “ என்றார் வேலுகுமார் எம்.பி.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435