அரச மருத்துவமனைகளில் இருதய, நுரையீரல் சிகிச்சை பிரிவு அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் சுகாதர அமைச்சர் அரச மருத்துவமனைகளில் இருதய, நுரையீரல் சிகிச்சை பிரிவு அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் ஆலோசனையின் பேரில் சங்கத்தின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பாலித்த மஹிபால சங்கத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் நோயாளர்களின் நிலை குறித்து கவனமெடுத்து வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு சங்கத்திடம் கோரியுள்ள குறித்த அதிகாரிகளிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் மங்கல ஜயசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் அனுப்பிய கடிதம் கிடைத்த போதிலும் தமது கோரிக்கைக்கான தீர்வு வழங்கப்படும் வகையில் வேலைநிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என்றும் இது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூவாயிரம் சம்பள உயர்வு தமக்கும் வழங்கப்படவேண்டும் மற்றும் சுகாதார அமைச்சு வழங்குவதாக உறுதியளித்த கொடுப்பனவு வழங்கத் தவறியமை என்பவற்றை சுட்டிக்காட்டி கொழும்பு, கராபிட்டிய மற்றும் கண்டி மருத்துவமனைகளில் இருதய மற்றும் நுரையீரல் சிகிச்சை பிரிவு அதிகாரகள் சங்கம் கடந்த 27ஆம் திகதி வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்