முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு மின்னிலக்க முறையில் சம்பளத்தை வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வெளிநாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஊழியர்கள் பணம் அனுப்பும் சேவை தொடர்பில் அரசாங்கம் இணைந்து செயல்படுகிறது என்றும் கூறினார் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ.
“தனிப்பட்ட அளவில், விரும்பிய முறையில், வீட்டிற்குப் பணம் அனுப்பும் வழிகள் ஊழியர்களுக்கு எப்போதும் இருந்தது உண்டு. கொடுக்கப்பட்ட சூழலில் நிச்சயமாக வழக்கம்போல பணம் அனுப்பும் சேவைகளை அவர்களால் அணுகமுடியாது. அதனால் வேறு முறைகளில் பணம் அனுப்பும் சேவையை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்றார் அவர்.
“முதலாளிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் போனாலும்கூட ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஊழியர்கள் வீட்டிற்குப் பணம் அனுப்ப வேண்டுமென்பது முக்கியம். அவர்களை நம்பித்தான் குடும்பங்கள் உள்ளன.
“ஊழியர்களுக்காக அண்மையில் அறிவிக்கப்பட்ட கூடுதல் திட்டங்களுக்கு முன்னரே 76% முதலாளிகள் மின்னியல் முறையில் சம்பளத்தை வழங்கி வருகிறார்கள். இதர முதலாளிகள் அவ்வாறு செய்ய அரசாங்கம் உதவியது என்றார் அமைச்சர் ஜோசஃபின்.
ஊழியர்களுக்குப் பணம் அனுப்பும் சேவை குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் பிரிகேடியர் ஜெனரல் சீட் உவெய் லிம். “நாம் விடுதி இயக்குநர்களுடன் சேர்ந்து பணம் அனுப்பும் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சிலருக்குத் தங்கும் இடத்திலேயே அத்தகைய சேவை உண்டு. ஆகையால் அவர்களுக்கு அது சுலபமாக இருக்கும். மற்றவர்களும் நேரடியாக பணம் அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்,” என்றார் அவர்.
இதற்கிடையே, வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கான கூடுதல் கட்டணத்தை மே 31 வரை தள்ளுபடி செய்துள்ளது.
மூலம் : www.tamilmurasu.com.sg