ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும், குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இந்த உறுதிமொழி வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்; வாக்குறுதிக்கமைய நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலை வாய்ப்பினை பெற்றுக்கு கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு உள்வாங்கப்படாதமை குறித்து, தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் தங்களை புறக்கணித்துள்ளமை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்;த விடயம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு தற்போது ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், விரைவில் வடக்கு கிழக்கு பிரதேங்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் ஜனாதிபதியும், பிரதமரும் கூறியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.