விளைவிக்கப்படும் நெல்லை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் கோரியுள்ளது.
இம்முறை சிறுபோகச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்து நீர்ப்பாசனம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதினால் நெற்செய்கை வெற்றியளிக்கப்பட்டது.
ஆனாலும் இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு மாவட்டத் திட்டமிடல் பிரிவு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் திருப்திப்படும் வகையில், அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து தரவில்லை.
இதனால், விளையும் பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நிலையில், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே விவசாயிகள் நெல்லை விற்க வேண்டியிருந்தது. எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 நெற் களஞ்சியங்களிலும் பிரதேச விவசாயிகள் தமது விளை நெல்லை விற்க ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் எனவும் அந்த குழு கோரியுள்ளது.
இதனிடையே, தற்போது விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் மணல் அகழ்வு மற்றும் காட்டுயானைகளின் தொல்லைகள் என்பன பெருகிவிட்டதாகவும் இதற்கு அதிகாரிகள் சிறந்த தீர்வை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழு கோரியுள்ளது.