பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் இயந்திர சாரதிகள் என் கிட்டத்தட்ட ஆயிரத்து 800க்கும் அதிகமான ரயில்வே பணியாளர்களும் சேவையிலிருந்து விலகியதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணாண்டோ எமது இணைத்தளத்துக்கு வழங்கிய செவ்வியின்போது இதனைத் தெரிவித்தார்.
கேள்வி – அனைத்து தொழிற்சங்களின் சார்பிலும் எத்தனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பதில் – ரயில் நிலைய அதிபர்கள் ஆயிரத்து 200 பேரும், ரயில் கட்டுப்பாட்டளர்கள் 600 பேரும், ரயில் இயந்திர சாரதிகள் 300 பேரும் என இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளோம்.
கேள்வி – ரயில்வே சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடன்ம் செய்யப்பட்டுள்ளது. எனினும், உஙகள் பணிப்புறக்கணிப்;பு தொடர்ந்து முன்னெடுப்படுகிறதே?
பதில் – ரயில்வே சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டாலும், எமது பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாங்கள் சேவையிலிருந்து விலகிச்சென்றுவிட்டதாக அறிவித்து, ரயில்வே திணைக்களத்தால், எங்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்புடன் தொடர்புடைய அனைவரும் சேவையிலிருந்து விலகிச்சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி – உங்களுக்கு எப்போது கடிதம் அனுப்பப்பட்டது?
பதில் – இன்று கடிதங்கள் அனுப்பபிவைக்கப்பட்டுள்ளன. பணியாளர்களின் வீடுகளுக்கு தந்தி மூலம் தனிப்பட்ட முறையில் அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணியிலிருந்து விலகியதாக பதிவுத் தபாலிலும் அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக எங்களது அலுவலகங்களுக்கும் அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கேள்வி – தொடரூந்து திணைக்க முகாமையாளர் உங்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்?
பதில் – தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களது சங்கங்கள் அனைத்தையும் கலைப்பதாக அறிவித்து ரயில்வே திணைக்கள முகாமையாளர் எங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுளார்.
அத்துடன், எங்களின் பதவிநிலைகள் யாவும் செல்லலுபடியற்றவை என்றும் அந்த கடிதம்மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தக் கடிதத்தை நாம் கவனத்தில் எடுக்கவில்லை.
கேள்வி – நீங்கள் சேவையிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டு, உங்கள் தொழில்வாய்ப்பு மிகவும் அபாயநிலையில் எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில், உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பதில் – பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் இன்று அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நாம் நடத்துகின்றோம். அடுத்ததாக என்ன செய்வது? இந்த நிலைமைக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பன தொடர்பில் ஆராய்கின்றோம் என்று கூறினார்.