வட மாகாணசபையும் மத்திய அரசும் தனித்தனியேயும் ஒன்றிணைந்தும் இணைந்து அக்கறையுடன் செயற்பட முன்வருமாயின் வட மாகாண பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் பி. கிரிதரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையான வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. இது எம் வாழ்க்கைச் சார்ந்த பிரச்சினை. எனவே விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. மாகாணசபை மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்து பொருத்தமான பொறிமுறையை உருவாக்கி எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 3600 தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் எமது சங்கத்தில் இணைந்துள்ளனர். கிழக்கு மாகாண மற்றும் அனைத்து இலங்கை பட்டதாரிகள் சங்கத்துடனும் இணைந்து நாம் பலம்மிக்க சங்கமாக தற்போது உருவாகியுள்ளோம். கொழும்பிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதனை உரிய முறையில் நிரப்புவதில் வடக்கு மாகாணசபையும் மத்திய அரசும் தனித்தனியாகவும் ஒன்றிணைந்தும் அக்கறையுடன் செயற்படுமாயின் வேலைவாய்ப்பினை வழங்க முடியும்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்க முன்வருவது போன்றே ஏனைய வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு முன்வரவேண்டும். ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வடக்கு மாகாணம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு செய்ய முன்வருவார்களாயின் சுமார் 400 பேர் வரையில் நியமனம் பெற முடியும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு 800 இற்கும் மேற்பட்டவர்களை நியமிக்க முடியும். அதேபோல் வட மாகாண திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதற்கு முன்வரவேண்டும்.
வேலைவாய்ப்பில் தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும். எமது சங்க உறுப்பினர்கள் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் போராட்டம் காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தீவிரமடைந்து எதிர்பாராத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பி. கிரிதரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.