எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் குருணாகலை மலியதேவ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வடமேல் மாகாண புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைபரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், துறைசார் அமைச்சர் என்றவகையில் பல விடயங்களை பொறுத்துக்கொண்டிருந்தேன். பணியக அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்புக்களையும் வழங்கினேன். இனி அவ்வாறில்லை. அவர்கள் கடமையை ஒழுங்காக செய்கின்றனரா என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும். சில அதிகாரகள் அவர்களின் கடமையை சரிவர பூர்த்தி செய்வதில்லை. அது குறித்த நான் கவலையடைகிறேன்.
பயிற்சி பெற்ற பணியாளர்களை வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதற்காக தொழிற்பயிற்சி அதிகாரசபை பல்வேறு பயிற்சிகளை தற்போது வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் கனிய வள எண்ணை சுத்திகரிப்பு தொடர்பில் பயிற்சிகள் வழங்கி வெளிநாடு அனுப்புவதற்கு நானும் அமைச்சர் சந்திம வீரக்கொடியும் தற்போது கலந்துரையாடி வருகிறோம்.
வௌிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக அனுப்பாமல் திட்டம் வகுத்து, ஒழுங்குமுறைப்படிதான் இவ்வேலைத்திட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் ஹோட்டல் துறை, கைத்தொழிற்றுறை பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அவை வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு மிகவும் பெறுமதி மிக்கதாய் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது வெளிநாடுகளில் பணிபுரியும் 338 பேருடைய பிள்ளைகளுக்கு 500,000.00 ரூபா புலமை பரிசில் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.