வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதந்திரத்திற்கான பெண்கள்
அமைப்பு நேற்று (02) பகல் மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டு “வெளிநாட்டில் அடிமை தொழில் செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான தொழிலை உறுதி செய், மலிவான பணியாளர்களாக பெண்கள் வெளிநாட்டுக்கு விற்கப்படுவதை நிறுத்து, வெளிநாட்டில் அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கு, வெளிநாட்டிலுள்ள பணிப்பெண்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பொருளாதார கொள்கைக்காக மலையக பெண்களை மட்டுமன்றி நாட்டில் அனைத்து பிரதேச பெண்களையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் ஈடுப்படுத்த அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இந்த பெண்கள் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மையில் மஸ்கெலியா பிரதேசத்தில் மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்று 4 மாதங்களின் பின் பிணமாக கொண்டு வரப்பட்ட கற்பகவள்ளியின் குடும்பத்தாரையும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து பாதிக்கபட்ட மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்களுடைய குடும்பத்தாரையும் இணைத்துக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.