சவுதி அரேபியாவில் உள்ள வீடுகளில் சாரதிகளாக பணியாற்ற செல்வோர் பல்வேறு துன்பங்களுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகி வருவது அனைவரும் அறிந்த விடயம்தான். இதனை தடுப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் இருந்தாலும் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறிவித்தாலும் பாதிக்கப்படுவோர் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் சவுதிக்கு சாரதிகளாக பணியாற்ற செல்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையிலான செவ்வியொன்றினை சம்மாந்துறையைச் சேர்ந்த அன்சார் என்ற நபர் பதிவு செய்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார். வறுமை காரணமாக பல்வேறு கனவுகளுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைவருக்கும் அவர்களுடைய கனவு நனவாவதில்லை. சிலர் குடும்பங்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு நிரந்தரமாகவே இவ்வுலகை விட்டு சென்று விடுகின்றனர்.
அவை தற்செயலாக நடக்கும் விபத்துக்களாக இருந்தால் மனதை ஆற்றிக்கொள்ள முடியும். சிலரின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது கூட தெரியவில்லை. மலையகப்பகுதியைச் சேர்ந்த கற்பகவள்ளியின் மரணமும் சவுதியில் இறந்த மூன்று மாதங்களின் பின்னர் தாய் நாட்டுக்கு சடலமாக வந்த ஒகஸ்டினும் அண்மைக்கால உதாரணங்கள். இதுபோல் இன்னும் எத்தனை பேர் இன்னல்களை சந்தித்து வருகின்றனரோ…