சிங்கப்பூர் குடிமக்களல்லாதோரின் பிள்ளைகளுக்கான பாடசாலை கட்டணம் அடுத்த ஆண்டு தொடக்கம் 150 சிங்கப்பூர் டொலரால் அதிகரிக்கப்படவுள்ளது என்று அந்நாட்டு கல்வியமைச்சு இன்று (11) அறிவித்துள்ளது.
இக்கட்டணமானது அந்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்களுடைய பிள்ளைகள் (PRs) அரச பாடசாலைகளில் கற்கும் சர்வதேச மாணவர்கள், அரச உதவியில் நடத்தப்படும் பாடசாலைளுக்கு செல்லுபடியாகும். வெளிநாட்டவர்கள் மற்றும் நிரந்த வதியுரிமை பெற்றவர்ளுக்கான பாடசாலை கட்டணம் கடந்த வருடமும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய மாற்றத்திற்கமைய நிரந்தர வதியுரிமை பெற்ற ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த கட்டணம் 110 சிங்கப்பூர் டொலரில் இருந்த 130 சிங்கப்பூர் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆசிய மாணவர்கள் மாதாந்த பாடசாலை கட்டணம் 370 சிங்கப்பூர் டொலரில் இருந்து 390 ஆக அதிகரித்துள்ள அதேவேளை ஆசிய மாணவர்களல்லாத சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் 550 சிங்கப்பூர் டொலரில் இருந்து 600 சிங்கப்பூர் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை கல்வி கற்கும் நிரந்தர வதியுரிமை பெற்ற மற்றும் ஆசிய , மற்றும் ஆசியரல்லாத சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் 40, 50 மற்றும் 150 சிங்கப்பூர் டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாதாந்த கட்டணம் 200 சிங்கப்பூர் டொலராக இருந்த கட்டணம் 600 மற்றும் 950 சிங்கப்பூர் டொலர்களால் அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு முன்னரான கற்கைக்கு நிரந்தர வதியுரிமை பெற்ற மற்றும் ஆசிய மாணவர்களுக்கான மாதாந்த கட்டணம் 60 சிங்கப்பூர் டொலரால் அதிகரித்துள்ளது. ஆசியரல்லாத சர்வதேச மாணவர்களின் வழமையான மாதாந்த கட்டணத்திற்கு மேலதிகமாக 150 சிங்கப்பூர் டொலரை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இம்மாற்றங்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களுக்கு செல்லுபடியாவதில்லை. ஆரம்ப பாடசாலை கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது. இரண்டாம் நிலை மற்றும் பல்கலைக்கழக கல்விக்கு முன்னரான கற்கைக்கு மாதாந்த கட்டணம் 5-6 சிங்கப்பூர் டொலர்களே செலுத்தப்பட வேண்டும்.