தேயிலை உற்பத்தி வளர்ச்சிக்கு அதிக கவனம் அவசியம்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் தேயிலை உற்பத்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருவதால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தொழிலாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாகும்.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதி 2015 ஆம் ஆண்டு 2.7 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து 338 மில்லியன் கிலோகிராம் தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், 2015 ஆம் ஆண்டு அது 329 மில்லியன் கிலோகிராமாகக் குறைவடைந்துள்ளது.

இதனால் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது நிபுணர்களின் நிலைப்பாடாகும்.

அத்துடன், இலங்கையின் தேயிலைக்கு சர்வதேசத்தில் நிலவிய கேள்வி குறைவடைந்தமையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்தமைக்கு மற்றுமொரு காரணமாகும்.

2014 ஆம் ஆண்டு தேயிலை மூலம் மொத்த தேசிய வருமானத்திற்கு 91,544 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

எனினும், 2015 ஆம் ஆண்டு அது 75,042 மில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளமையினால் நடப்பு ஆண்டில் இலங்கையின் தேயிலைக்கு அதிகக் கேள்வி கிடைக்கும் என இலங்கையின் மத்திய வங்கியின் 2015 ஆண்டு மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான அதிக வாய்ப்புக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் தமது சம்பளத்தை அதிகரித்து உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்குமாறு தொழிலாளர்கள் கோருகின்றனர்.

வெயில், மழை பாராது லயன் அறைகளின் வாழ்ந்து கொண்டு நாளாந்தம் கொழுந்து பறிக்கச் செல்லும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமை கவலைக்குரிய விடயமாகும்.

தேர்தல் காலங்களில் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாகத் தெரிவிக்கும் அரசியல்வாதிகள் அதன் பின்னர் மௌனம் சாதிப்பதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435