மத்திய கலாசார நிதியத்தில் மேன்பவர் நிறுவனத்தின் கீழ் தொழிலாளர்களாக பணியாற்றும் 1,660 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் மேன்பவர் நிறுவன ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 1,660 பேருக்கே இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் 500 ரூபா குறித்த மேன் பவர் நிறுவனத்திற்கு சொந்தமாகிறது. இது தொழிலாளர்களை சுரண்டும் செயலாகும். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து உடனடியாக செயற்பட்ட அமைச்சர், குறித்த நிறுவனத்துடனிருந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததையடுத்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் கீழ் சேவை செய்த, உரிய தகைமைகளுடைய ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அமைச்சரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் இவ்வூழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.