வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வடக்கு சென்றுள்ள அமைச்சர் நேற்று காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் குடாநாட்டு மீனவ அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

குடாநாட்டுக் கடலில் மேற்கொள்ளப்படும் இழுவைப்படகுத் தொழில் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில், உள்ளுர் இழுவைப்படகுகளை வைத்தே இந்திய இழுவைப் படகுகளும் எமது கடற்பகுதியில் அத்துமீறி நுழைகின்றன. கடலட்டை, சங்கு என்பவற்றைப் பிடிப்பதையும் நிறுத்த வேண்டும் கடலட்டை பிடிப்பதனால் கடல் வளங்கள் முற்றாக அழிவடைகின்றன. இதனால் தாம் பட்டினிச் சாவை எதிர் நோக்க வேண்டியுள்ளது. உள்ளுர் மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் யாழ் குடாநாட்டில் 12 கடலட்டை பிடிக்கும் நிறுவனங்கள் உள்ளன என்று இதன் போது மீனவச்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டின.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல் நட்டத்தை எதிர்நோக்கும் மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது அவசியம். இந்திய மீனவ படகுகளால் பாதிக்கப்பட்ட உபகரணங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். எரிபொருள் மானியம் சீரான முறையில் வழங்கப்பட வேண்டுமெனவும்,தம்பாட்டிப் பகுதியிலுள்ள கடற்படை முகாமினை அகற்ற வேண்டுமெனவும், வெற்றிலைக்கேணி, புங்குடுதீவு, அனலைதீவு, மாமுனை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை புனரமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

தொண்டைமானாறு நன்னீர் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 1330 குடும்பங்களுக்கு நஷ;டஈடு வழங்க வேண்டும், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமற் வெடி மூலம் மீன்பிடித்தல் போன்றவற்றால் கரை வலை தொழில் பாதிப்படைவதாகவும் மீனவ சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், உள்ளுர் இழுவைப் படகுகள் தொடர்பில் அடுத்த மாதம் செபரெம்பர் 25ஆம் திகதிக்குள் தீர்வு எட்டப்படும். மேலும் பாரிய பிரச்சினையாக இந்திய இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதுவரை சுமார் 130 ஆழ்கடல் இழுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகுகள் இதுவரையிலும் விடுவிக்கப்படவில்லை. நாம் எமது நாட்டின் மீனவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே செயற்படுகின்றோம். ஆயினும் இந்திய இழுவைப்படகுகள் விடயத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் உரிய கவனம் எடுத்தே செயற்பட முடியும். அத்துமீறும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர், மத்திய அமைச்சர்கள், தமிழக மாநில அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடப்படவுள்ளது. முதற்கட்டமாக செப்ரடம்பர் மாதம் 8ஆம் திகதி இந்திய மத்திய கடற்தொழில் அமைச்சருடன் பேசவுள்ளோம். இந்திய மீனவ குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் விசேட கவனம் எடுக்கப்படும்.

மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தினை மிக விரைவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் துறைமுகங்களையும் நங்கூரமிடும் துறைகளையும் நவீன முறையில் கட்டியெழுப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இதன்பிரகாரம் காரைநகரில் 280 மில்லியன் ரூபாய் செலவில் உருவாகவுள்ள படகுத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

மேலும், பருத்தித்துறை, குருநகர் போன்ற பகுதிகளில் படகுத்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. பருத்தித்துறை 7000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள துறைமுகம் இலங்கையில் மிகப்பெரிய துறைமுகமாக இருக்கும். 200 மில்லியன் ரூபாய் செலவில் குருநகர் படகுத்துறைமுகம் விருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன. மேலும் யாழ் குடாநாட்டில் 17 படகு இறங்கு துறைகள் 4 நங்கூரமிடும் துறைகள என்பன அமைக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 150 ஆழ்கடல் இழுவைப்படகுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச கடலில் மீன்பிடிப்பதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கம் என்றும், இதன் மூலம் அந்த மாவட்டம் வளர்சியடையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், எம்;.கே. சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட்; கூரே, அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் குடாநாட்டு மீனவ சமூகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலைத்தளம்/ உதயன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435